Montag, 14. Februar 2011

Personal Memories about Pavanar - MaNavai Mustafa

பாவாணர் நினைவு - மணவை முசுதபா

அண்ணாமலைப் பல்கலைக் கழகம், தமிழாய்வுக்குத் தலைசிறந்த இடம் என்ற பெருமையை உருவாக்கிக் கொள்ள விழைந்த பல்கலைக் கழகத் துணை வேந்தரும் இணை வேந்தரும் புகழ்பெற்ற தமிழ் ஆய்வறிஞர்களைப் பல்கலைக் கழகத்திற்குக் கொண்டுவந்து சேர்ப்பதில்தனிக்கவனம் செலுத்தியதன் விளைவு தான், சேலம் அரசினர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராயிருந்த பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சித் துறையில் அங்கம் பெற்றது.

பாவாணர் அவர்களும் பல்கலைக்கழகத் தமிழ் ஆராய்ச்சிப் பணியில் மூழ்கியிருந்த நேரத்தில்தான், அவர் வாழ்க்கையில் மாபெரும் திருப்பு முனையாயமைந்த அந்த நிகழ்வு நடை பெற்றது.

கீழ்த்திசை மொழிகளின் மாநாடு முனைவர் சுநீதகுமார் சட்டர்சி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சிறப்பாக ஏற்பாடாகியிருந்தது. இந்தியாவெங்கணுமிருந்தும் கீழ்த்திசை நாடுகளிலிருந்தும் பல்வேறு மொழி ஆராய்ச்சி அறிஞர்கள் ஒருங்கு திரள பட்டமளிப்பு மண்டபம் நிரம்பி வழிந்தது.

வரவேற்புரை முடிந்தவுடன் தலைமைப் பொறுப்பேற்றிருந்த வங்கமொழிப் பேரறிஞர் சுநீதகுமார் சட்டர்சி தன் தலைமைப்பொழிவை ஆற்ற முனைந்தார். அவர் வங்க மொழி அறிஞராக இருந்த போதிலும் வடமொழியாகிய சமற் கிருதத்திலும் நிறை புலமை மிக்கவர். தென் மொழியாகிய தமிழும் அறிந்தவர். தன் தமிழ்ப் பற்றைக் காட்டிக் கொள்ளுமுகத்தான் தன் பெயரை நன்னெறி முருகன் எனச்சூட்டிக் கொண்டவரும் கூட. அவர் உரையை அவையினர் ஆவலோடு கேட்கத் தொடங்கினர்.

தொடக்கத்தில் தமிழைப் பாராட்டிப் பேச முனைந்தவர், வடமொழியைப் போற்றித் துதிக்கத் தொடங்கினார். தமிழ் வளர்ச்சிக்கு ஆதார சுருதியாக வடமொழி எவ்வாறெல்லாம் விளங்குகிறது என்பதை விலாவாரியாக விளக்கத் தொடங்கியபோது, தமிழுள்ளங்கள் கொதிக்கத் தொடங்கின, தொடர்ந்து பேசிய அவர் ஒரு கட்டத்தில்  தமிழின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் எல்லா வகையிலும் துணை நின்றது சமற்கிருதம்.. என்று கூறி முடிக்கும் முன்பு இதை நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்று ஆராய்ச்சிப் பேரறிஞர் தேவநேயப் பாவாணர் வீறுடன் எழுந்து நின்று கடுங் குரலில் மறுதளித்தார். பாவாணரைத் தொடர்ந்து சில தமிழ் ஆய்வறிஞர்களும் என்னொத்த தமிழ் மாணவர்களும் கடும் எதிர்ப்புக்குரல் எழுப்பினோம்.
இதைச் சற்றும் எதிர் பாராத சட்டர்சி, ஓரளவு சமாளித்தவராக, நான் கூறியதற்கு ஆதாரமுள்ளது எனக் கூறியவராக, எதையெதையோ அடுக்கிக் கூறத் தொடங்கினார். பாவாணரும் நாங்களும் அவரைத் தொடர்ந்து பேச அனுமதிக்காத நிலையில் கடும் எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருந்தோம். செய்வகை தெரியாது திகைத்து நின்ற சட்டர்சி அப்படியே அமர்ந்து விட்டார். அருகில் அமர்ந்திருந்த இணைவேந்தரிடம் தன்னை வருந்தி அழைத்துவந்து, பல்கலைக் கழகத் தமிழ் ஆராய்ச்சியாளர் பாவாணரிடமும் மற்றவர்களிடமும் அவமானம் அடையச் செய்துவிட்டீர்களே எனப் புலம்ப, இதைக் கேட்ட இணைவேந்தர் மிகவும் வேதனைப் படலானார்.

தமிழைத் தாழ்த்திப் பேச ஒரு மாநாடா என்ற உணர்வில் பாவாணர் அவர்கள் கூட்டத்தைவிட்டு வெளியேற, நாங்களும் சில பேராசிரியப் பெருமக்களும் அவரோடு கூட்டத்தை விட்டு வெளியேறினோம்.
கூட்டத்தை விட்டு வெளியேறிய பாவாணர் வாளாவிருக்கவில்லை., தமிழ் வளர்ச்சிக்கு வடமொழியே ஆதாரம் என்பதற்கு என்னென்ன காரணங்களை சட்டர்சி அடுக்கினாரோ அவற்றிற்கெல்லாம் தக்க மறுப்புரையை ஆதார பூருவமாக எழுதினார். இரவோடு இரவாக அதை அச்சிட்டோம். இதை வேறு யாருமே எதிர்பார்க்கவில்லை. மறுநாள் காலை மாநாடு தொடங்கு முன் மாநாட்டு வாசலில் நின்றபடி மாநாட்டில் பங்குபெற வந்திருந்த அனைவருக்கும் அளித்தோம். மறுப்பேட்டைப் பெற்றவர்கள் அதை உடனடியாகப் படிக்கத் தவறவில்லை. பாவாணர் வாதம் மறுக்க முடியாததாக இருந்ததால் அவரைப் பாராட்டாதவர்களே இல்லை எனலாம். இதனால், தான் பாவாணரால் மிகவும் அவமானப் படுத்தப்பட்டு விட்டதாகக் கருதிய சட்டர்சி இணைவேந்தரிடம் தன் மனவருத்தத்தை முறையிட, இணைவேந்தர் உடனடியாக பாவாணரைப் பணிநீக்கம் செய்து ஆணையிட்டார். இந்த எதிர்ப்பு, பணிநீக்கம் எதைக் கண்டும் சிறிதும் அஞ்சாத பாவாணர். தமிழ் மீது படியவிருந்த மாசைத் துடைத்தெறிந்த பெருமித உணர்வை மட்டுமே அப்போது பெற்றிருந்தார். பணி ஒப்பந்தத்தை முறிக்கப்பட்டது, பல்கலைக் கழக இல்லத்தைக் விட்டு வெளியேற உத்தரவு வந்தது. பல்கலைக் கழகம் அளித்திருந்த இல்லத்தை உடன் காலி செய்ய வேண்டும். மூட்டை முடிச்சுப் பணியெல்லாம் முடிந்து விட்டது. நள்ளிரவும் கடந்துவிட்டது. வழக்கமான பாவாணரின் இளைப்பு நோய் அன்று சற்று அதிகமாகவே இருந்தது. என் கைகளை இழுத்து தன் உள்ளங் கையில் பதித்தவராக.., நச்சினார்க்கினியரே (அப்போது என் பெயர் அதுதான்) பெரும் இடர்பாடுகட்கிடையே தான் உண்மையான தமிழ்ப்பணி நடைபெற முடியும் என்பதற்கு இச்சூழலே சான்று. என்னை வெளியேற்றியதற்காக நான் வருந்தவில்லை. தமிழ் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைத்துவிட்ட பெருமித உணர்வு எனக்குப் பெருமகிழ்வளிக்கிறது. எந்தச் சூழலிலும் நாம் மேற்கொண்டுள்ள தமிழ்ப்பணி தொடரும், இறுதி மூச்சுள்ளவரை தொடரும் என்று கூறியபோது அப்பெருமகனாரின் கண்களில் மின்னிப் பொழிந்த பேரொளிதான் இன்று வரை எனக்குக் கலங்கரை விளக்கமாயமைந்து வழிகாட்டிக் கொண்டுள்ளது.

இரவு நேரங்களில் அவர் இல்லத்துக்குச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். ஏதேனும் காரணத்தால் தொடர்ந்து ஒரு வாரம் அவர் இல்லம் செல்லத் தவறிவிட்டால், அவரே என்னைத் தேடி, விடுதி அறைக்கு வந்துவிடுவார்.
பாவாணர் அவர்கள் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறிய சில திங்களிலேயே நானும் பல்கலைக்கழகப் படிப்பு முடிந்து வெளியேறி விட்டேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஒருநாள் கவிஞர் செவ்வியன் தொலை பேசியில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள பாவாணர் அவர்கள் இன்று சென்னை வந்துள்ளார். உங்களைப் பற்றிக்  கேட்டார் தெரியும் என்றேன். நச்சினார்க்கினியரை உடனே காண வேண்டும், என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் எனக்கூறி வற்புறுத்தினார். இருவரும் உங்கள் வீடு நோக்கி வந்து கொண்டுள்ளோம் எனக் கூறிய போது எனக்கு ஏற்பட்டுள்ள மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. என் இல்லத்திற்கு வந்த அவரை வரவேற்கும் போது என்னை இறுக அணைத்துக் கொண்டார். அவர் அன்பால் நெகிழ்ந்து போய்விட்டேன். கண்கள் நீரைப் பொழிந்தன. உள்ளே வந்து உட்கார்ந்தவுடன் உங்கள் பிள்ளைகளைக் காண வேண்டும் எத்தனை பேர் என்றார். "இரு ஆண் மக்கள் ஒரு பெண்.." என்று கூறி முடிக்கும் முன் அவர்கள் மூவரும் அங்கு வந்து வணங்கி நின்றார்கள். பெயர் கேட்ட மாத்திரத்தில் 'தேன்மொழி, அண்ணல், செம்மல்' எனக் கூறியதைக் கேட்டு துள்ளியெழுந்தவராக, எங்கள் நச்சினார்க்கினியர் என்றும் தடம் மாறாதவர், உண்மைத் தமிழர், தமிழ் வளர்க்கும் மறவர் என்றெல்லாம் உடன் வந்திருந்த கவிஞர் செவ்வியனிடம் கூறி மகிழ்ந்த காட்சி என்னாலோ என் துணைவியாராலோ என்றுமே மறக்க முடியாத ஒன்று.
மதியம் வந்தவர் இரவு எட்டுமணி வரை என் இல்லத்தில் இருந்தார். எத்தனையோ செய்திகளைப் பரிமாறிக் கொண்டோம் அனைத்தும் தமிழைப் பற்றி மட்டுமே. அதன்பிறகு எங்கள் தொடர்பு முன்புபோல் தொடர்ந்தது. தமிழாகவே வாழ்ந்த அப்பெருமகன் என்றும் என் நினைவில் நிழலாடிக் கொண்டேயுள்ளார். மறந்தால் தானே நினைப்பதற்கு!

நன்றி: யாதும் ஊரே

Keine Kommentare:

Kommentar veröffentlichen